எனது சுனாமி நினைவலைகள் .


இன்னும் என் நினைவில் நிழலாடும் சுனாமியின் வடுக்கள் ...
அன்று இதே தினத்தில் அதிகாலை திடிரென வந்த தொலைபேசி அழைப்பு சொன்ன செய்தி இன்றும் என் காதில் ரீங்காரம் செய்கின்றது..   "எம் ஊருக்குள் கடல் வந்துட்டாம்..சாய்ந்தமருது கல்யாண வீதியெல்லாம் கடந்து வந்துட்டாம். ரிஸ்வி டாக்டர் மௌத்தாஹிட்டாராம் ... "இன்னாளில்லாஹி வயின்னா இளைகி ராஜிஊன்" என்ற பிராத்தனைகளுடன் ஒரு கணம் என் ஊரைய்யும் என் உறவுகளையும் நினைத்து உள்ளம் பத பதைத்து... செய்திகளின் உண்மை நிலவரம் அறிய எனது சகோதரியின் தொலைப்பேசிக்கு அழைத்தபோது. ஒரே சத்தத்துடன் சட்டென்று அறுந்து போன உணர்வு..  கடல் வந்த எல்லையை அறிந்ததபோது. எனது தாய் மற்றும்  உடன் பிறப்புக்களின் நிலை என்னவென்று ஒரு கணம் ஊகித்து உள்ளார்ந்த பிராத்தனைகளை அனைவருக்காகவும் செய்து கொண்டு.தடுமாறிய கணப்பொழுதுகள் வாழ்வில் மறக்க முடியாத ரணங்கள் ..

கடல் ஊருக்குள் வந்ததாம்!.அது எவ்வாறு சாத்தியப்படும்?

வாழ் நாளில் கேள்விபடாத, கண்களால் காணாத சம்பவம்.. நம்பவே முடிய வில்லை.. செய்திகளின் உயிரோட்டம் அறியும் ஆவலில் இணைய வளம் சென்று தகவல்களை என் சகோதரர் சித்தீக் தேடி கொண்டிருந்தார்...

தேடலில் வந்த செய்திகளும் தகவல்களும் அக் கடல் அலையை "ஆழிப் பேரலை" அல்லது "சுனாமி" என அழைப்பது தெரிய வந்தது...

சக்தி எவ் எம் இணைய வானொலி உள்ளோர் தகவல் அறியா பெரிதும் உதவியது..

எவ்வாறு இருந்த போதிலும்  என் உடன் பிறப்புக்களின் நிலை லண்டன் நேரம் பிற்பகல் வரை ஒரு கேள்விக்குறியாகவே இருந்தது ..

யாரிடமிருந்து.. என் தாய் மற்றும் உறவுகளும் நிலை பற்றி அறிவது.. "தவகல்து அளல்லாஹ்".. என்று சொல்லிக்கொன்று என் ஆருயிர் நண்பர் "மறூசின்" கைத்தொலைப்பேசிக்கு பதற்றத்துடன் அழைத்தபோது....
ஆதரவாகத் தந்த பதில் சற்று ஆறுதல் தந்தாலும்,என் மன ஆறுதலுக்கு என் உறவுகளின் நிலையை நேரடியாகச் சற்று சென்று பார்த்து உன் தொலைபேசி மூலம் சற்று கதைக்க உதவி செய்ய முடியுமா என்று வினவினேன். சற்றும் தளராது "ஆம் ! சென்று பார்த்து உனக்கு விடை தருகிறேன் " என்று கூறிய உயரிய வார்த்தைகளில் "நட்பின் ஆழம்" மேலோங்கிக் காணப்பட்டது.. ( அல் ஹம்துலில்லாஹ்). (நட்பின் ஆழம் ஆபத்தில் தறியும் என்பதற்கு இது ஒரு பாடமாய் அமையும்.) 

சொன்னபடி நேரில் சென்று பார்த்து சில மணி நேரங்களில் சொன்ன தகவல்கள் இதுதான்:
 "சுனாமிக்கு முதல் நாளில்தான் எனது தாயார் புனித ஹஜ் கடமையை நிறை வேற்ற வேண்டி புறப்பட கொழும்புக்கு போனதாகவும் ,சகோதர சகோதரிகள் அனைவரும் மாடி வீட்டில் ஏறியதால் தெய்வா தீனமாக உயிர் தப்பிக் கொண்டார்கள் .இந்த தகவல்களை கேட்டு மனதுக்கு ஆறுதல் அளித்தாலும் 
ஊரின் நிலைமை கேட்டு வருணிக்க முடியாத வேதனைகளை தாங்கிக் கொண்டேன்.

.எவ்வாறாயினும் இன் நிலைமைகளையும் உடன் பிறப்புக்களையும் நேரில் சென்று பார்த்தே ஆக வேண்டும் போலிருந்தததால் ஜனவரி மாதம் பத்தாம் நாள் என நினைக்கிறேன் லண்டனிலிருந்து இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றேன் .

விமான நிலையத்தில் வைத்து ஹஜ்ஜுக்கு புறப்பட்டு செல்லவிருந்த என் அருமைத் தாயார் மற்றும் எனது சகோதரர் கரீம் ஆகியோருக்கு சலம் சொல்லி வலி அனுப்பிக் கொண்டு சுனாமி விட்டுச் சென்ற தடங்களை பார்வை இட கொழும்பிலிருந்து  எனது ஊருக்கு புறப்பட்டுச் சென்றேன் 

   

பிறந்து வாழ்ந்து சுற்றித் திரிந்த எனது ஊர் பிரதேசங்கள் முகவரி இழந்து சோபை இழந்து காணப்பட்டது..
மரண வீடுகள்.. மனக் குமுறல்கள்.. தாங்க முடியவில்லை..அல்லாஹ்வின் விதிப்படியே எல்லாம் நடந்து தீரும் ...எனக்குள் நானே ஆறுதல் அடைந்து கொண்டேன். 

தங்கி இருந்த நாட்களில் அவ்வப்போது பிரதேச மக்களின் குமுறல்களை கேட்டு ஆதங்கமடைந்த்ததின் விளைவாக இதன் கீழுள்ள கட்டுரை ஒன்றை நவமணி பத்திரிகைக்கு அனுப்பி விட்டு வந்தேன்..


எல்லாம் வல்ல இறைவன் இன் நாளில் உயிர் நீத்த ,பாதிப்புக்குள்ளான மக்களின் துயர்களை களைந்து மேன்மையான வாழ்வை அளிப்பானாக ஆமீன்  

Comments

Popular posts from this blog

வைர விழா கொண்டாடும் இங்கிலாந்தின் மகாராணிக்கு இனிய வாழ்த்துக்கள்

JAZAH CONSULTANTS